நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து பொதி!

நிந்தவூர் அரசஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையினால் கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாரம்பரிய ஆயுள் வேத முறைகளுக்கமைய தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து பொதி வழங்கல் அறிமுக நிகழ்வும் சுவதாரணி ஆயுர்வேத மருந்து வழங்கும் நிகழ்வும் புனித தீகவாபி பரிவாரசைத்தியில் முதல் முறையாக இடம்பெற்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய கொரோனா தொற்று நோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சுதேச மருத்துவ அபிவிருத்தி கிராமிய மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலைகள் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின் பணிப்புரைக்கமைய ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிகவின் வழிகாட்டலின் அடிப்படையிலும் கொரோனா தொற்றுநோயை மக்கள் மத்தியிலிருந்து ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெற்றது .

நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம் . நக்பரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தீகவாபி பரிவார சைத்தியின் வணக்கத்துக்குரிய போதிவெல சந்திரானந்த ஹிமி மற்றும் 241 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேட் கொமாண்டர் ஏ.எம்.சி. அபயகோன், நீத்தை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜௌபர் ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் என சிலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .

முதல் தடவையாக கொரோனா தொற்று காரணமாக வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களின் நலன் கருதி அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்குடனேயே இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல் . எம்.நக்பரினால் ஆயுர்வேதவைத்திய முறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் கொத்தமல்லி , மரமஞ்சள் , சுக்கு மற்றும் ஹீன் அரத்த நிலவேம்பு போன்ற கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுள்வேத பானத்தை அருந்தும் முறைகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது .

அத்தோடு கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு குறித்த மருந்து பொதி தக்க பயனைதரும் எனவும் குறிப்பிடப்பட்டது .

இதே நேரம் நிகழ்வில் கலந்து கொண்ட தீகவாபி பரிவாரசைத்தியின் வணக்கத்துக்குரிய போதிவெல சந்திரானந்த ஹிமி நிந்தவூர் அரச ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றாநோய் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் பாராட்டு தெரிவித்ததுடன் இப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *