இறப்புகள் தொடர்பில் ஆராய சர்வதேச உதவி

இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதன் பின்னர் அறிவிக்கப்பட்ட ஆமைகள், திமிங்கிலங்கள் மற்றும் டொல்பின்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்களின் இறப்புகள் குறித்து ஆராய்வதற்கு சர்வதேச உதவியை நாடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட கப்பல் தீ விபத்துக்குள்ளான பின்னர் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் தொடர்பில், அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய இழப்பீடு பெறுவது குறித்த மற்றொரு கலந்துரையாடல் நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இடம்பெற்றபோதே மேற்படி விடயம் அறிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் விசாரித்ததோடு, வெளிவிவகார அமைச்சின் ஒருங்கிணைப்புடன் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தீ விபத்து காரணமாக தொழிலை இழந்து பாதிக்கப்பட்ட மேல் மாகாண மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் துல்லியத்தை ஆராய்ந்து இழப்பீடு வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதுவரை பெறப்பட்ட இழப்பீடுகள், பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்போது, தீ விபத்தின் காரணமாக மாசுபட்ட கடற்கரைகளை சுத்தம் செய்தல், இழப்பீட்டின் சட்டபூர்வ நிலை, மீனவர்களுக்கு இழப்பீடு, கடல் உயிரினங்களின் மரணம் மற்றும் சர்வதேச வழக்கறிஞர்களின் உதவி ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *