இலங்கையில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறினார்.
மேலும் அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறுகின்றார்.
அத்தோடு 30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 96 வீதமானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தடுப்பூசிக்கு அச்சம் கொண்ட சிலர் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவித அச்சமும் இன்றி, அவ்வாறான தரப்பினரும் விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
அத்தோடு தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 12 வயதுக்கு மேற்பட்ட தரப்பிற்கு விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதை தெரிவிக்க முடியாது எனவும், அதுவரை நாட்டை முடக்கி வைப்பது சாத்தியம் இல்லையெனவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.