ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அவரது அரசாங்கத்திற்கும் எதிராக இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி நாட்டில் தற்போது ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில்,
ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைதியான முறையில் பொது மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதில், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கோஷங்களை எழுப்பியும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஜா-எல நகரில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பாணந்துறை பேருந்து நிலையம் மற்றும் நிட்டம்புவ நகருக்கு அருகாமையிலும் அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக காலி – மாத்தறை வீதி காலி பஸ் நிலையத்திற்கு முன்பாக தடைப்பட்டுள்ளது.
பதுளை மற்றும் நுவரெலியாவிற்கு இடையிலான பிரதான வீதியை மறித்து வெலிமடை நகரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று மேலும் பல அமைதியான பொதுப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



