
எல்லையற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கமானது, அதன் குறுகிய கால நிதி, பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளால் இந்த நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது என்று பல்கலைக்கழக விரிவுரையாளர் சஙகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் நிலைமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களது அறிக்கையில்,
சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை சந்தித்த மிகவும் பாதகமான பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சியை நாம் தற்போது அனுபவித்து வருகிறோம்.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், இழிவான 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக பெற்றுக்கொண்ட எல்லையற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியையும் கொண்டுள்ள தற்போதைய அரசாங்கமானது, அதன் குறுகிய கால நிதி, பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளால் இந்த நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளது.
கடந்த தேர்தலின் பின்னர் நகரங்களை அழகுபடுத்தவும், தரிசு நிலங்களை பயிரிடவும், சிறந்த எதிர்காலம் இனி மலரும் எனவும் எதிர்பார்த்த இளைஞர் யுவதிகள் இந்நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலையை இன்றைய அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
எரிபொருள், எரிவாயு, மின்சாரம், பால் மா,உரம் போன்றவை மட்டுமின்றி, பாடசாலைப் பரீட்சைகளுக்கு வினாப்பத்திரங்களை தயாரிப்பதற்கான கடதாசிகளைக் கூட பெறமுடியாத நிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையால் இந்த அரசாங்கமானது தந்திரமான ஒரு தீர்வுத் திட்டத்தினையோ சமகால நெருக்கடிகளைத் தீர்பதற்கான உண்மையான அக்கறையையோ கொண்டிருப்பதை எமக்குத் தென்படவில்லை.
இன்றைய நாட்களில் பொதுமக்கள் எந்த அரசியல் பின்புலங்களின் தூண்டுதலுமின்றி சுயமாகவே அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கி உந்துதல் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கச் சம்மேளனம் (FUTA) பொதுமக்களின் நியாயமான பிரச்சினைகளை தீர்க்காத தற்போதைய அரசாங்கத்தை வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசாங்கம் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கச் சட்டம் என்பனவற்றைப் பயன்படுத்தி இராணுவ மற்றும் பொலீஸ் படைகள் வீதிகளில் இறக்கி தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்கு முயற்சிக்கின்றது.
நிராயுத பாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்களை தீவிரவாதிகள் என இவ்வரசு முத்திரை குத்துவதற்கு முயற்சிக்கின்றது.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பொருத்தமற்ற அற்ப தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்களை வன்முறையில் தூண்ட முயற்சிக்கிறது.
தற்போதைய நெருக்கடிக்கு உரிய குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வுகளை உடனடியாகக் கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக கூட்டாளிகளை தவிர்த்து விட்டு நிதி மற்றும் பொருளாதார துறை சார்ந்த உண்மையான நிபுணர்களிடமிருந்து ஆலோசனைகளை எதிர்ப்பார்க்கின்றோம்.
மேலும், இந்த கேவலமான அரசிற்கு எதிரான போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபடும் போது உயிர்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வாறும் மாற்றுச் சத்திகளின் வலைகளில் சிக்கிவிடாதவாறும் விழிப்புடன் நடந்துகொள்ளுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.