இலங்கை பெண்ணை ஏமாற்றி அரிச்சல் முனையிலுள்ள மணல் திட்டில் இறக்கிவிடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட படகை தமிழக கரையோர பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக இந்திய செய்திகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இலங்கை வருவதற்காக சட்டவிரோதமாக படகில் வந்த நிலையில், அரிச்சல்முனை மணல் திட்டில் நிர்க்கதியாக கைவிடப்பட்டுள்ளார். இதன் போது அந்தப் பெண் கடந்த 5 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்ப முயற்சித்த அப்பெண் முல்லைத்தீவை சேர்ந்தவர் ஆவார்.
இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமானம் மூலமாக சென்றிருந்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் நாடு திரும்பும் நோக்கில் தரகர் ஒருவரின் உதவியை நாடியிருந்தார்.
இதற்கமைய, இராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவர் அங்குள்ள மணல் திட்டில் இறக்கிவிடப்பட்டிருந்தார். இலங்கை படகிற்காக சுமார் 8 மணி நேரம் காத்திருந்த போதும் படகு வராத நிலையில், நிர்க்கதியாகியிருந்த பெண்ணை தமிழக கரையோர பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரது வாக்குமூலத்திற்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்த தமிழக பொலிஸார் அரிச்சல்முனைக்கு படகை செலுத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.