கிராம அலுவலரை தாக்கியவருக்கு விளக்கமறியல்

வவுனியா தாண்டிக்குளம் கிராம அலுவலகரின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அவரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபரை வவுனியா நீதவான் நீதிமன்றம் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கடந்த வாரம் கண்டி வீதி புகையிரத வீதிக்கரையில் சட்டவிரோதமாக விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டதற்கு எதிராக, வவுனியா பிரதேச செயலாளர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன.

இந்நிலையில் அப்பகுதியில் தாண்டிக்குளம் கிராம அலுவலகரும் தனது கடமைகளை பிரதேச செயலாளருடன் இணைந்து மேற்கொண்டிருந்தார்.

இதனை அவதானித்த சட்டவிரோதமாக விற்பனை நிலையம் அமைத்த நபர் ஒருவர், குறித்த கிராம அலுவலகரை மகாறம்பைக்குளம் பகுதியில் கடந்தவாரம் வழிமறித்து வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டு அவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.

தாக்குதலுக்குள்ளான கிராம அலுவலகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துகொண்டார்.

சந்தேக நபர் தலைமறைவாகியதை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது தாக்குதல் மேற்கொண்ட சந்தேக நபர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

கிராம அலுவலகரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக சந்தேக நபரை 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்திவிட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தேக நபர் கடந்த காலங்களில் கொக்குவெளியில் பொதுமக்களின் காணிகளை சட்டவிரோதமாக கையகப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளதுடன், பல்வேறு சமூக விரோத செயற்பாடுகளையும் மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பல தடவைகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு தண்டனைகள் அனுபவித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply