கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற மக்கள் காட்டுவிலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்வதுடன் தற்போதைய கொரோனா காலகட்டத்தில் சுகாதார பழக்கவழக்கங்களை எந்த துறையினராக இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தற்போதைய கொரோனா காலகட்டத்தில் சுகாதார பழக்கவழக்கங்களை எந்த துறையினராக இருப்பினும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இப்போது பொதுமக்கள் சரியான முறையில் சுகாதார பழக்க வழக்கங்களை கையாள்வதில்லை என்பதாகும்.அதுமாத்திரமன்றி உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைக்கமைய இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை வயதுவித்தியாசமின்றி முழுமையாக நாங்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.எமது பிராந்தியத்தில் உள்ள மக்கள் வீடுகளில் ஓய்வெடுத்து கொள்ளுங்கள்.தேவையற்று வீட்டில் இருந்து வெளியேறுவதை தவிருங்கள்.
இதற்கு அடுத்ததாக ஆயுள்வேத சுகாதார துறையானது மக்களுக்கு காட்டுவிலங்குகள் பறவைகளின் தொடர்புகளை குறைத்து கொள்ளுங்கள் என்பதில் ஆலோசனை வழங்குகின்றது.அடிக்கடி தோடம்பழம் தேசிக்காய் போன்ற பானங்களை நாம் அருந்த வேண்டும்.அதிகமான இயற்கை உணவுகளை நாம் உண்ண வேண்டும்.8 தொடக்கம் 10 மணிவரை ஓய்வெடுக்க வேண்டும்.அரிசிக்கஞ்சி போன்றவற்றை அடிக்கடி அருந்த வேண்டும்.மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது.சூரிய ஒளியில் 1 மணித்தியாலம் கிடைக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும்.எமது வீடுகள் நாம் வசிக்கின்ற இடங்களை நன்கு காற்றோட்டம் உள்ள இடமாக மாற்றி கொள்ளல் வேண்டும்.இவற்றை செய்வதன் ஊடாக டெல்டா மாத்திரமல்ல எந்த வைரஸ் திரிபுகள் எதிர்காலத்தில் உருவாகினாலும் அந்த நோயில் இருந்து நாம் எம்மை முழுமையாக பாதுகாத்து கொள்ள முடியும்.
தடுப்பூசி வழங்குதலானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தோற்றுவிக்கும் ஒரு செயற்பாடாகும்.இதனால் ஆயுள்வேத மருந்து வகைகளை பாவிப்பதனாலும் எந்தவொரு பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஏற்படாது என நம்புகின்றேன்.எனவே தான் மக்களிடம் தடுப்பூசிகளை முதலில் ஏற்றிக்கொண்டு பக்கபலமாக இந்த ஆயுள்வேத மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.இதனூடாக கொரோனா தொற்றிலிருந்து முழுமையான பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.