குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம் பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம்- அங்கஜன்

பிள்ளையார்  ஆலய குள பாதுகாப்பு சுவருக்கு பூசப்பட்ட வர்ணம், பௌத்த வர்ணம் அல்ல ஒலிம்பிக் வர்ணம் என தன்னிடம் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி தெரிவித்ததாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் குளம் புனரமைப்பு செய்யப்படும் நிலையில் குளத்தை சுற்றி புதிதாக கட்டப்பட்டிருக்கும் பாதுகாப்பு சுவர்களில் பௌத்த கொடியை ஒத்த வர்ணம் தீட்டப்படுவதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, யாழ்.பிள்ளையார் ஆலய குளத்தினை புனரமைக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக, வர்ணப்பூச்சுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் குறித்த வர்ணங்கள், பௌத்த கொடியினை பிரதிபலிப்பதாக ஏற்படுத்தப்பட்ட சர்ச்சை தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன்.

அதற்கு, குறித்த நிறங்கள் ஒலிம்பிக் கொடியினை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதாகவும் அவை அருகில் உள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவர்களை கருத்தில் கொண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஆகவே  இந்த விடயத்தில் வீண் சர்ச்சைகளை தவிர்க்குமாறும் சுயலாப அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும்போது பௌத்த கொடியில் பச்சை நிறம் உள்ளடக்கபட்டிருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வர்ண சர்ச்சை காரணமாக குளத்திற்கு நேரடியாக சென்ற யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வர்ண பூச்சு பணிகளை இடைநிறுத்துமாறு பணித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *