யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஒக்ரோபரில் நடாத்த தீர்மானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 ஆம், 08 ஆம், 09 ஆந் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நாட்டில் இப்போதுள்ள கொரோனா – தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமைகள் நீடிக்குமாயின், சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதனை நிகழ்நிலையில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், தற்போதைய நிலமைகள் வழமைக்குத் திரும்பிய பின்னர் பிறிதொரு நாளில் சம்பிரதாய பூர்வ பட்டமளிப்பு விழாவை நடாத்தி மாணவர்களுக்குப் பதக்கங்களைப் பெற்றோர் முன்னிலையில் அணிவிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் தொடர்பில் ஊடகங்களின் ஊடாக மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க் கிழமை காலை, யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஊடகச் சந்திப்பின் போது பட்டமளிக்கு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் மேற்கொண்ட ஊடக விபரிப்பின் போதே இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இந்த ஊடகச் சந்திப்பின் போது பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, பதிவாளர் வி. காண்டீபன், பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர், பட்டமளிப்பு விழா நிகழ்வு முகாமைத்துவ தலைவரும், தொழில் நுட்ப பீடாதிபதியுமான பேராசிரியர் திருமதி சிவமதி சிவச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *