சைவ சமய அர்ச்சகர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிர பரவல் காரணமாக , அர்ச்சகர் / சிவாச்சார்யர்களது வாழ்வு கடந்த இரண்டாண்டுகளாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மயூரகிரி சர்மா குருக்கள் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

எனினும் அதில் அவலம் என்ன என்றால், ஆகமப்படி பூஜைகள் நடக்க வேண்டும் என்று அனர்த்த காலத்திலும் மற்றைய தொழில்கள் முடங்குகிற போதும் அச்சத்தின் நடுவிலும் தினசரி அர்ச்சகர்கள் தமது பணியை தொடர்ந்து செய்கிறார்கள்.ஆனால், கோயிலுக்குள் பக்தியாக நுழையும் அடியார்களை தடுக்கும் வல்லமை எமக்கு முழுமையாக இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கோயிலுக்கு வருகின்ற அடியார்களை, முக கவசம் அணியுங்கள், அருகில் வராதீர், அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வராதீர் இப்படி எல்லாம் சொல்லவும் இயலாது. ஏனெனில் அவை நிர்வாகத்துடன் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.

இந்த நிலையில் வட இலங்கையில் பெரும்பாலான அர்ச்சககுடும்பங்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளன. சென்ற வாரத்தில் மட்டும் சிவவேதிய சிவாச்சார்ய குடும்பங்களுள் பல கொவிட் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இதில் குருக்கள், அடியார்கள், நிர்வாகம் இம் மூவகையரதும் நோய் குறித்த அவதான குறைவும் காரணமாயினும் இடையில்லா பணி பெரிதும் காரணமாகிறது.

இதில் என்ன அவலம் என்றால் கொவிட்டினால் பாதிக்கப்பட்ட அர்ச்சகருக்கு உடனடியாக வாழ்வியற்சங்கடம், நோய் ஓய்வு, மருத்துவ தேவை, பயம், தனிமைப்படுத்தல் எல்லாம் ஏற்படும்.

இது மற்ற அனைத்து தரப்பாருக்கும் உண்டாவது. ஆனால் அர்ச்சகருக்கு மேலதிகமாக உடனடிப்பணி ஒன்று வருகிறது.
அது இந்த மிக அவலமான நிலையில் அடுத்த நேர பூஜைக்கு ஆள் தேடுவது?

கொவிட்டால் பாதிக்கப்பட்டவர் இருந்த இடத்திற்கு உடனடியாக இன்னொருவர் பாதுகாப்பு அங்கி இன்றி உட்செல்ல அஞ்சுவர். ஆனால் அதையும் மீறியே அர்ச்சகர்கள் வேறு இயங்குகிறார்கள். இந்த கஷ்டங்களை அந்த அந்த இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும்.

அதை விட, சைவ சமய குருமார்களுக்கு உள்ள நெருக்கடி என்ன என்றால், அவர்கள் ஆசாரமான தூய சைவ போசனம் செய்ய வேண்டியவர்களாவர்.

அவர்களை தனிமைப்படுத்துகிற போது, உணவு விவகாரங்களில் பெரிதும் சிக்கல்பட்டார்கள். அதற்கு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம், நியந்த்ரீ அமைப்பு, இந்துக்குருமார் ஒன்றியம் முதலியன விரைவாக செயற்பட்டு உரிய உரியவர்களோடு பேசி சீரான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். அது பாராட்டுக்கும் வணக்கத்திற்குமுரியது.

அது போல, சிவபூமி அறக்கட்டளை, ரிஷி தொண்டுநாதன் சுவாமி போன்றவர்கள் நிவாரண உதவிகளை குறித்த அளவு வழங்கினார்கள்.இன்னும் சில பணிகள் செய்ய வேண்டி உள்ளது.

கோயிலில் ஒரு பிரச்சினை வரும் போது விரைவாக பொது நலன் கருதி தொற்று நீக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். இனி பரமேஸ்வரன் தான் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும்- என தெரிவித்தார்.

Leave a Reply