வடக்கில் வறுமை நிலை அதிகரித்துள்ளது! ஜேவிபி

வடக்கு, கிழக்கு என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகும். அதில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது. இவ்வாறான பின்னணியில் இன்று வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் பத்தரமுல்ல, பெலவத்த தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

வடக்கு, கிழக்கு என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகும். அதில் எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது. இவ்வாறான பின்னணியில் இன்று வடக்கு மாகாணத்தில் வறுமை நிலை அதிகரித்துள்ளது.

வேலையில்லாப் பிரச்சினைகள், சமூக பொருளாதார ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.

அதுமட்டுமல்லாது, வடக்கில் இருக்கின்ற ஏறக்குறைய 80 ஆயிரம் விதவைப் பெண்களுக்கு உரிய தீர்வுகள் என்னும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலைமை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 28 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் தலைமைத்துவம் வகிக்கின்ற குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை.

இவ்வாறான நிலைமையில் இன்று வடமாகாணத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை செயலிழந்து போயுள்ளது. அதனால், அங்கு நாளுக்கு நாள் குற்றச் செயல்களும் அதிகரித்து வருவதை எம்மால் காணக்கூடியதாகவுள்ளது.

அந்தவகையில், கேரளக் கஞ்சா கூடுதலாக இறக்குமதி செய்து பரிமாறப்படுகின்ற இடமாக வடமாகாணம் மாறியிருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.

வடமாகாணம் முழுவதும் வாள்வெட்டு கும்பல்களின் அடாவடித்தனம் அதிகரித்துள்ளது. யுத்த காலத்தில் எவ்வாறு மக்கள் அச்சத்தில் வாழ்ந்தார்களோ அதேபோல், இந்த வாள்வெட்டு கும்பலின் நடவடிக்கைகளால் மக்கள் பீதியில் வாழ்கிறார்கள்.

நாம் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சி சம்பந்தமாக எடுத்துக்கொண்டாலும் சரி! வறுமை நிலமையை எடுத்துக்கொண்டாலும் சரி! கூடுதலான வறுமையில் வாடுகின்ற மாகாணமாக வடமாகாணம் மாறியிருக்கின்றது.

அதிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் வறிய மக்கள் வாழுகின்ற மாவட்டங்களாக காணப்படுகின்றன. இலங்கையில் வறுமை நிலை ஒப்பீட்டு நிலைமை 6.7 சதவீதமாக இருக்கின்றபொழுது, கிளிநொச்சி மாவட்டத்தில் 10.9 சதவீதமாக வறுமை நிலை அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்று வடமாகாணம் என்பது வறுமை கோட்டின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்ற மாகாணமாக மாறியிருக்கிறது.

அதேபோல், நாடு கொரோனா எனும் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மிகவும் மோசமடைந்துக் கொண்டிருக்கிறது. கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில் இதுவரையில் 5000 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

இதுவரையில் கொரோனா தொற்றினால் வடக்கு மாகாணத்தில் 578 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஒகஸ்ட் மாதத்தில் 228 மரணங்களும், செப்டம்பரில் இதுவரை 169 மரணங்களும் பதிவாகியுள்ளன. கடந்தகாலத்தைக் காட்டிலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், கொவிட் மரணங்களும் பாரியளவில் அதிகரித்துள்ளன.

மக்களைப் பாதுகாப்பதற்காகத் தனிமைப்படுத்தல் சட்டங்களை சரிவர நடைமுறைப்படுத்த ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

யாழில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்குரிய இடம் கிடையாது. இவ்வுடல்களை தகனம் செய்வதற்கு ஒரேயொரு மயானம் மாத்திரமே காணப்படுகிறது.

ஆனால், ஒருநாளைக்கு 10 முதல் 12 பேர் வரை கொரோனாவால் உயிரிழப்பதாகவும், ஆனால், தகனம் செய்கின்ற இயந்திரத்தில் 4 அல்லது 5 உடல்களை மாத்திரமே தகனம் செய்ய முடியும் என்றும், அதற்கு மேல் உடல்களை தகனம் செய்ய முடியாது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அதனல் ஒவ்வொரு இடங்களிலும் பிணங்கள் குவிந்து கிடக்கின்ற நிலைமை காணப்படுகிறது. கடந்த வாரம் ஒருவர் இறந்திருப்பின் 8 நாட்களுக்குப் பின்னரே அவரின் உடல் தகனம் செய்யப்படுகிறது. இது மிகவும் பாரதூரமான நிலைமையாகும்.

இவ்வாறான நிலைமையின் கீழ், கொரோனாவால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணமாக 2000 ரூபா வழங்குவதாகச் சொல்கிறார்கள்.

வடமாகாணத்தில் மிரிசுவில் என்ற சிறிய கிராமமொன்று இருக்கிறது.
அங்கு 60 விதவைப் பெண்கள் வாழ்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் வாழ்கிறார்கள். ஆனால், 2,000 ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் உரித்துடையவர்கள் அல்லர் என்று கூறப்படுகிறது.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரமாகவிருந்த மீன்பிடித்துறை செயலிழந்துள்ளது.

இந்தியப் படகுகளின் அட்டகாசம், இந்திய மீனவர்களுடைய ஆக்கிரமிப்பு போன்ற காரணத்தால் வடமாகண மீனவர்களுடைய வாழ்வுக்கு வேட்டு வைக்கின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான ஆக்கிரமிப்பினால் எமது நாட்டு வளம் சூறையாடப்படுகிறது.

அதேபோல், வடமாகாண மக்கள் விவசாயத்தை நம்புகிறவர்கள். சேதன உரப்பிரச்சினை வந்ததன் பின்னர் விவசாயத்தைக் கைவிடுகின்ற நிலைமை அங்கு ஏற்பட்டுள்ளது.

விசேடமாக, யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களுக்கு வெளிநாட்டில் இருந்து தமது உறவுகளால் அனுப்பப்படுகிற பணம் இல்லாவிட்டால், மிகவும் நெருக்கடியான பஞ்ச நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். இந்நிலைமையில் இருந்து இம்மக்களை மீட்டெடுப்பதற்கு, இம்மக்களுக்குக் கை கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் வடக்கிற்கு சென்று விளையாட்டு காட்டுகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களுக்குத் தண்ணீர் காட்டமுடியாது. இனியும் இம்மக்கள் ஏமாறப்போவதில்லை.

முஸ்லிம்கள் இறந்த பின்னர் அவர்களது உடல்களை ஓட்டமாவடிக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், ஓட்டமாவடியிலும் இன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வடமாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் இப்பிரச்சினைக்கு பாரியளவில் முகம்கொடுத்து வருகின்றனர்.

அதேபோல், வடமாகாணத்தில் மக்களுடைய காணிகள் கொள்ளையடிக்கப்படுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வனபாரிபாலன திணைக்களத்தினால், இதுநாள்வரை விவசாயம் செய்துவந்த மல்லாவி, புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரிப்பதற்கு ஏதுவான அடையாளக் கற்களை நாட்டி வருவதாக அப்பிரதேச விவசாயிகள் கூறுகின்றனர்.

எமக்குத் தெரியும், கோட்டாபய ராஜபக்சாவினுடைய அரசாங்கம் வடக்கில் வாழ்கின்ற மக்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு மற்றும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, அம்மக்களை இவர்களுடைய இரும்பு சப்பாத்துக்களால் மிதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

அதனால், மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையில் நாங்கள் கேட்டுக்கொள்வது, கொரோனாவால் பாதிக்கபட்ட மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். அவ்வாறு முன்வராத பட்சத்தில் அம்மக்கள் மென்மேலும் உங்கள் மீது வெறுப்படைவதைத் தவிர்க்க முடியாது என்பதையும் நாங்கள் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.

இன்று கொரோனாவை விட கொடியதாக வறுமை காணப்படுகிறது. வடமாகாண மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் நிவாரணம் என்று வழங்கும் பிச்சைக்காசான 2,000 ரூபாவையாவது முறையாக கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

வடமாகாணத்தில் முல்லைத்தீவில் வெலிஓயா என்ற பிரதேசம் காணப்படுகிறது. இதுநாள்வரை அங்கு கொரோனா பிரச்சினை இருக்கவில்லை.

ஆனால், தற்போது கொரோனா அதிகரித்து வருகிறது. சிவில் பாதுகாப்புப் படைகளை வெளிபிரதேசத்திற்கு கொண்டு செல்வதன் காரணத்தால் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் 20 பேர் கொழும்புக்கு வந்தார்கள். அவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அவர்களை வெலிஓயவில் கொண்டு சென்று விட்டார்கள்.

வெலிஓய வறுமையான மக்கள் வாழ்கின்ற பிரதேசமாகும். அங்கு கூடுதலாக சிங்கள மக்கள் வாழ்கின்றார்கள். அம்மக்கள் சிறிய வீடுகளில் வசிக்கிறார்கள். முறையாக மலசலகூட வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுகிறது. அம்மக்களுக்குத்தான் இன்று கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதனால், வெலிஒய, கஜபாபுர பிரதேச மக்கள் “கொரோனாப் பிரச்சினைத தீரும் வரையில் இங்கிருந்து சிவில் பாதுகாப்பு படைகளை வெளியில் கொண்டு செல்வதை நிறுத்துங்கள்.” என்று கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

கடந்த காலத்தில் உங்களுடைய வீரர்கள் என்றும் உங்களுடைய பிரதேசம் என்றும் கூறிய வெலிஒயா பிரதேசம் இன்று ஆபத்தான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதற்கான முழுக்காரணம் அரசாங்கத்தினுடையதாகும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply