காணி விற்பதை தடுக்க பொதுக்கட்டமைப்பு உருவாக்க வேண்டும்வேண்டும்- கென்றி மகேந்திர

காணி விற்பதை தடுக்க பொதுக்கட்டமைப்பு வேண்டும்!
”தமிழரர் பிரதேசத்துக்குள் மதரசா கட்ட முற்படுவது இன முறுகலுக்க வித்திடும்;”
”முஸ்லிம்களுக்கு பாதகமில்லாமல் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவதை நாங்கள் எதிர்க்கமாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸ் உறுதியளித்ததனாலேயே வரவு செலவு திட்டத்தை ஆதரித்தோம்”

கல்முனை மாநகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன்- வழங்கி நேர்காணல்

கல்முனை மாநகரசபையின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கினீர்கள். பொது அமைப்புக்கள் பல அதனை எதிர்த்திருந்தன. அது தொடர்பாக உங்கள் கருத்து?

கல்முனை மாநகரசபையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என்ற ஏற்பாடுகள் ஆரம்பத்தில் நடைபெற்ற போது எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்குமிடையில் பேச்சுவார்தைகள் நடந்தன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் மேயராக வருவதற்கு த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்கள் அதரவு வழங்க வேண்டும் எனவும் பிரதி மேயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க தாங்கள் ஆதரவு தருவதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதி மேயர் என்பது முக்கிய குறிக்கோள் இல்லை . கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கான அதிகாரங்கள் கிடைக்க முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்ககூடாது அத்துடன் புதிய நகர அபிவிருத்தி திட்டம் தமிழருக்கு பாதகமாக அமையக் கூடாது தமிழரின் வயல்காணிகள் அபகரிக்ககூடாது என்ற கோரிக்கைகளுடன் கல்முனையில் வளப்பங்கீடு பக்கச்சார்பின்றி பகிரப்பட வேண்டும் இந்த உடன்படிக்கை எழுத்து மூலம் தரும் பட்சத்தில் ஆதரவு வழங்குவோம் என எமது கருத்தை முன்வைத்தோம். இந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் நாங்கள் எதிர்த்திருந்தோம்.

காலப்போக்கில் அவர்களின் செயற்பாடுகளில் 100 வீதம் திருப்தி இல்லாவிட்டாலும் பொதுவிடயங்களில் ஓரளவு திருப்தி இருந்தது. தொடர்ச்சியாக 2 வரவு செலவு திட்டங்களையும் எதிர்த்தே வந்தோம். அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு எம்முடன் ஆதரவு கோரினார்கள். எமது கட்சி தலைவருடன் வினவியிருந்தோம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எமது தலைமையுடன் பேசியிருந்தார்கள் ஏற்கனவே முன்வைத்த கோரிக்கையை முன்வைத்தோம். அவர்கள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வுக்கு தாங்கள் இனி எதிர்ப்பதில்லை எனவும் அதற்கான தீர்வு முஸ்லிம்களுக்கு பாதகமின்றி அமைய வேண்டும் என்ற கொள்கையுடன் வந்தார்கள். அத்துடன நகர அபிவிருத்தி திட்டத்தில் தமிழர்களின் காணிகள் தமிழ் மக்களின் விருப்புக்கு மாறாக திணிக்கப்படபடமாட்டாது வளப்பங்கீடு விகிதாசார அடிப்படையில் பகிரப்படும் எனவும் கொள்கையளவில் உடன்பட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவதத்தின் பொது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு தாங்கள் எதிர்ப்பு இல்லை முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாத தீர்வுக்கு தாங்கள் ஆதரவு என உரையாற்றியிருந்தார்.

இது தொடர்பாக நானும் சபையில் பேசியிருந்தேன் இந்த கருத்தை வலியுறுத்தி உறுப்பினர் றொசான் அக்தாரும் பேசியிருந்தார்.
எமது கட்சியின் தலைமையுடனான கலந்துரையாடலின் பின்பு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தோம்.
கல்முனை மாநகர சபையில் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 தமிழ் உறுப்பினர்கள் உள்ளார்கள் 29 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளார்கள.; இதில் தமிழர் ஒருவர் மேயராக வருவதற்கு வாய்ப்பு இல்லை . இந்த நிலையில் மேயராக யாருக்கு நாம் ஓப்பிட்டவில் ஆதரவளிக்கலாம் என்றும் யோசித்தோம். கல்முனை வடக்கு பிரதேச செயலகமே வேண்டாம் என்று கூறிக்கொண்டிருக்கம் அதாவுல்லாவின் பின்னால் ஆதரவு வழங்கிக்கொண்டிருக்கும் சாய்ந்தமருது சுயேச்சைக்கு நாம் ஆதரவு வழங்குவதா அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கவதா என்ற நிலையில் இந்த முடிவை எடுத்தோம்.
வரவு செலவு திட்டத்துக்கு எதிர்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதற்கான மாற்று வழியையும் கூற வேண்டும்.
கொள்கை மாறாமல் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எமது மக்களுக்கு எது ஒப்பீட்டளவில் பாதிப்பில்லை என்பதை வைத்து முடிவெடுப்பதே அரசியல் சாணக்கியம்.

வளப்பங்கீடுகள் மாநகரசபை சேவைகள் பக்கச்சார்பின்றி இடம்பெறுகின்றதா?

வரவு செலவு திட்டத்தின் பின்னர் மாநகரசபையில் வருமானம் இல்லை காரணம் கொவிட் நிலைமை. மாநகரசபைக்கு வருமானம் வரும் வழிகள் வர்த்தக வரி குத்தகை வரி சோலைவரி முத்திரை வரி நீதி மன்ற தண்டப்பணம். ஆனால் கொவிட் நிலைமைகளால் வருமானம் முடங்கியுள்ளது. இந்த நிலையில் இருக்கும் வருமானங்களைகொண்டு அத்தியாவசிய சேவைகளை மாநகர சபை செய்கின்றது. உதாரணமாக திண்ம கழிவகற்றல் தெருவிளக்கு பராமரிப்பு போன்ற சேவைகளே இடம்பெறுகின்றன. அது பக்கச்சார்பின்றி இடம்பெறுகின்றன. வளப்பங்கீடு செய்யும் நிலையில் வருமானம் இல்லாத நிலைதான் தற்போது காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் உள்ளது என்ற கருத்து தங்கள் கட்சி சார்ந்தோரால் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட 2001 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆண்டுவரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நேரடி வழிநடத்தலில் இருந்தது என்பது வெளிப்படையான உண்மை.
2009 ஆம் ஆண்டின் பின்பு சிறிய கட்சி பெரிய கட்சி என்ற அடிப்படையிலும் தமிழரசுக்க்சியின் சின்னம் பதிக்கப்படுவதும் த.தே.கூட்டமைப்புக்குள் தமிழரசுக்கட்சியின் ஆதிக்க போக்கு இருப்பதும் வெளிப்படையான உண்மை.
ஏங்களது கட்சியை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் தீர்வு நன்மை கருதி ஆதிக்க போக்கு உள்ளது இல்லை என்பதற்கப்பால் விட்டுக்கொடுப்புடன் வந்திருக்pன்றோம் ஒற்றுமையை கருதி இது தமிழரசுக்கட்சியின் தலைமைகளின் மனச்சாட்சிக்கும் தெரியும்.
அரசியல் கூட்டமைப்புக்குள் காலத்துக்கு காலம் கருத்து முரண்பபாடுகள் நடைமுறை முரண்பாடுகள் எழுவதென்பது யதார்த்தம் இது த.தே.கூட்டமைப்புக்கு மட்டும் இந்த பிரச்சனை இல்லை.

தற்போது எழுந்துள்ள விடயம் ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பும் அறிக்கை அனுப்புவதில்தான் தற்போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கு வெளியில் உள்ள தமிழ்க் கட்சிகளின் சம்மதங்களும் பெறப்பட்டு அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து ஒன்றாக அறிக்கையை அனுப்பும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தமிழர்களை பொறுத்தமட்டில் எல்லோரும் ஒன்றாக அறிக்கையை அனுப்பபுவதுதான் அது பெறுமதியாக இருக்கும்.

இந்த விடயத்தை மட்டும் வைத்துக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது.
சில சில கசப்புகள் எங்களுக்குள் இருக்கலாம் அதனை எமக்கள் பேசி கதைத்து ஓரு குடையின் கீழ் ஒரு கொள்கையின் கீழ் ஒருமித்து பயணிப்பதுதான் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற வலுவாக அமையும். புதவி மோகத்துக்காக கட்சி பேதங்களுக்காக பிரதசவாதங்களுக்காக பிளவுபட்டால் அது எமது மக்களின் தீர்வைக்காண முடியாதுபோகும். மாறாக எமது மக்களுக்கு துரோகம் செய்யதாகவே அமையும்.

கல்முனை கண்ணகியம்மன் கோவில் வீதியில் விற்கப்பட்ட காணியில் மதரஷா ஒன்றைக் கட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று பேசப்படுகிறது.இதை தடுப்பதற்கு என்ன முயற்சி எடுக்கின்றீர்கள்?

இந்த விடயங்களுக்கு அடிப்படை காரணிகள் என்ன என்பதை பார்க்க வேண்டும். கல்முனை பிரதேசத்தில் உள்ள தமிழ்க் காணிகள் மாற்றாருக்கு விற்பனை செய்யப்படாமலும் இலாப நோக்கோடு வாங்கி விற்பவர்கள் மாற்றாருக்கு விலை போகாமலும் எப்படி தடுப்பது என்பதை தமிழ் சமூகம் என்ற அடிப்படையில் சிந்தித்து நாம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும்.

சமூக மட்டத்தின் ஊடாக இதனை தடு;ப்பது எப்படி என்கின்ற செயற்பாட்டை செய்வதற்கு எமது சமூகத்திலுள்ள அரசியல்வாதிகள் தலைவர்கள் சமூக அமைப்புக்கள் ஆலயங்களின் நிருவாகங்கள் இளைஞர் அமைப்புக்கள் கழகங்கள் உட்பட ஒருங்கமைத்து சீரான வேலைத்திட்டத்தை வகுத்து தடுப்பதற்கான நடவடிக்ககைய எடுக்க வேண்டும்.
இதனை நாங்கள் முன்னின்று செய்யும்போது அதனை அரசியலாக பாhக்கப்படும் அரசியலுக்காக செய்வதாக கூறப்படும். இவ்வாறு பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து வரும்பொது அவர்களுக்கு முழுப்பக்கபலமாக நாமும் செயற்படுவோம்.

குறித்த காணியில் மதிரஷாவோ பள்ளிவாசலோ அமைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது . இந்த இடம் முழுமையாக தமிழ் மக்கள் ( இந்து கிருஸ்த்தவம்) செறிந்து வாழும் இடம். இங்கு இவ்வாறு குறித்த மதஸ்தலம் அமைப்பதாக இருந்தால் அது இனங்களுக்கடையில் வீணான பிளவுகளை ஏற்படுத்தும். இன நல்லிணக்கத்தை இல்லாமல் செய்துவிடும். இந்த கருத்துக்கு ஆட்சேபனை தெரிவிப்பவர்களிடம் ஒன்றை கூறுகின்றேன். சம்மந்தப்பட்வர்கள் இதனை தவிர்ப்பது நன்று. இலங்கையில் ஒரு வனக்கஸ்தலமோ மத பாடசாலையோ அமைவதாக இருந்தால் நாட்டின் சமய விவகார அமைச்சின் கீழ் தெளிவான சட்டதிட்டங்கள் உள்ளது. அங்கு உரிய சட்ட திட்டங்களுக்கமைவாக அனுமதி பெற வேண்டும். இந்த விடயம் தொடர்பாக நாம் அவர்களுக்கு முறைப்பாட்டை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *