ஊடகவியலாளருக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரன், சாணக்கியன் – வெடித்தது புதிய சர்ச்சை!

தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று மரணித்த ஊடகவியலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தியமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸ் கடந்த 2 ஆம் திகதி மரணமடைந்ததை தொடர்ந்து யாழ். தென்மராட்சி, வெள்ளாம்போக்கட்டியிலுள்ள அவரது வீடு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

அத்தோடு தமிழ் பேசும் பல்வேறு தரப்பினரிடையேயும் குறித்த ஊடகவியலாளரின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்ததுடன், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாமையால் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்குச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தியிருந்ததுடன், மரணித்த ஊடகவியலாளரின் பெற்றோருடனும் கலந்துரையாடி இருந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ் விவகாரம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஊடகவியலாளர் பிரகாசின் வீடு இன்றைய தினமே செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டது.

மேலும் இவ்வாறான நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டிற்கு எவ்வாறு குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் தனிமைப்படுத்தல் அறிவித்தலை மீறி செல்ல முடியும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சுகாதாரப் பிரிவினரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்தோடு மாற்றுத்திறனாளியான இளம் ஊடகவியலாளர் பிரகாஸ் தசையழிவு நோய்த்தாக்கத்தால் சக்கரநாற்காலியின் துணையோடு இயங்கிய நிலையிலும், தனது திறமையாலும் எழுத்தாற்றலாலும் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த ஒருவராக விளங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *