
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டு முழு அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையாக அதனை மாற்றுமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று யோசனை முன்வைத்தார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் இவ்வாறான திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
“பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கையில்லா பிரேரணையில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற பொதுச்செயலாளரிடம் நேற்றைய தினம் யோசனை ஒன்றை கையளித்தார்.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த 22ஆம் திகதி எதிர்கட்சியின் 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தோடு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் இதில் எதிர்காலத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் அறிவுறுத்தப்படவில்லை.
அதை போல் நேற்றைய நம்பிக்கையில்லா பிரேரணையானது அமைச்சர் உதய கம்மன்பிலவை அடிப்படையாக வைத்து முன்வைக்கப்பட்டது. நிலையியற் கட்டளை 43 கீழ் 4இன் படி இச்சந்தர்ப்பத்தில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது. இது பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

