சந்தையில் காணப்படும் எந்தவொரு நிறத்தினாலான வெற்று சமையல் எரிவாயு கொள்கலனுக்கும், லிட்றோ சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என லிட்றோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் (Laugfs) வீட்டு சமையல் எரிவாயு இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட திடீர் தீர்மானத்தையடுத்து, சந்தையில் ஏற்படக்கூடிய சமையல் எரிவாயு பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கே லிட்றோ சமையல் எரிவாயு நிறுவனம் மேற்குறித்த திட்டத்தினை முன்வைத்துள்ளது.
அதற்கமைய, சந்தையில் நிலவும் கேள்வியை பூர்த்தி செய்யக்கூடிய அளவு தம்மிடம் கையிருப்பு உள்ளது என லிட்றோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேலதிகமான எரிவாயு கொள்கலன் தேவைகள் அதிகரித்தால் அதனை நிவர்த்திப்பதற்கான இயலுமை தமது நிறுவனத்துக்கு உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சந்தையில் சமையல் எரிவாயு தேவையை பூர்த்தி செய்யும் பிரதான நிறுவனங்களாக, லிட்றோ மற்றும் லாஃப்ஸ் ஆகியன காணப்படுகின்றன.
சந்தையில் 20 சதவீதமான சமையல் எரிவாயு தேவையினை லாஃப்ஸ் நிறுவனமே பூர்த்தி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.