
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்த ஊழல் மோசடிகளை மூடி மறைத்த காரணத்தினால் நாடு இன்று அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முறைப்பாடு செய்த போதிலும் அவர்கள் அவற்றை கண்டுகொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த மோசடிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காமையினால் நாடு இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துசான் குணரட்ன இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகன கொள்வனவு அனுமதிப்பத்திரத்தை 300 முதல் 400 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்து, அமைச்சுக்களுக்கு அதி சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து அமைச்சர்கள் பயன்படுத்துகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தியுள்ளார். 69 லட்சம் மக்களின் ஆணையில் தெரிவான ஜனாதிபதியை வீட்டுக்கு செல்லுமாறு 69 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கோருகின்றார்கள்.
எனவே மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென கோரியுள்ளார். ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகி இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
பிரதான நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அது கிராமங்கள் வரையில் வியாபித்து அவர்களும் கொழும்பு நோக்கிப் படையெடுக்கும் வரையில் காத்திருக்காது தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.