கோட்டா பதவி விலகும் போது 20வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்! நளின் பண்டார

ஜனாதிபதி பதவி விலகும் போது 20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரும்பாலானோர், ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நரகத்திற்கு இடைவேளை கிடையாது. ஆளும் கட்சியினர் நரகத்திற்கு இடைவேளையை பெற முயற்சித்து வருகின்றனர்.

கோட்டாபய ஜனாதிபதியாக இருக்கும் போது, எதிர்க்கட்சியினருக்கு அரசாங்கத்தை வழங்கி, தேசிய அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் ஏதாவது ஒன்றை அமைத்து சமாளிக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் அந்த பொறிகளுக்குள் சிக்க போவதில்லை. ஜனாதிபதி கோட்டாபய விலக வேண்டும், ராஜபக்சவினர் விலக வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம்.

ஆளும் கட்சியை சேர்ந்த பலர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ராஜபக்ச குடும்பத்தினர் அநீதியாக சம்பாதித்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வருவது நாட்டின் பொருளாதார பலத்திற்கு சிறந்த ஆரம்பமாக இருக்கும்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகவில்லை என்றால, அவரை பதவியில் இருந்து நீக்கும் முறை தொடர்பாகவும் நாங்கள் ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதீதமான அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

20வது திருத்தச் சட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச அதிகாரமற்ற பொம்மையாக மாறினார்.

இதனால், கோட்டாபய ராஜபக்ச பதவி விலகும் போது 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்த நாளைய தினம் கொழும்புக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எந்த கட்சியின் ஆதரவுமின்றி வரவுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க அவன்கார்ட் தலைவர் நிஷ்சங்க சேனாதிபதி சிலருக்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார்.

நிஷ்சங்க சேனாதிபதி கொழும்பில் ஆங்காங்கே இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் சாப்பாட்டு பொதிகளை வழங்கவும் கண்காட்சிகளை நடத்தவும் கோடிக்கணக்கான ரூபாய் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக கேள்விப்பட்டோம்.

இளைஞர்களை களியாட்டு பக்கம் திசை திருப்பி மக்களின் போராட்டத்தை நீர்த்து போக செய்ய முயற்சித்து வருகின்றனர்.

மக்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தி, அதனை கேலியாக மாற்றும் ஒப்பந்தம் கூராஜிக்கு(இராஜ்) வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வாசல் காவலாளிகளாக இருக்கும் சில வர்த்தகர்களும், அரசாங்கத்தின் எலும்புகளை நம்பி வாழும் சிலருமே தற்போது அரசாங்கத்தை பாதுகாக்க இருக்கின்றனர்- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *