அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு காணப்படுகின்ற 11 தமிழ் அரசியல் கைதிகள், அமைச்சர் நாமலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்தே நாமல் சிறைச்சாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள்,மதுபோதையில் பிரவேசித்து குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயற்பட்டதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர், தனது பாதுகாவலர்கள் மற்றும் துப்பாக்கியுடன் உள்நுழைந்து அரசியல் கைதிகளை மண்டியிடவைத்து மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கமைய சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த நேற்று தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதன் காரணமாக, தாம் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பின்மை தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ளவேண்டும் என அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை, நாமல் ராஜபக்ஸ இன்றைய தினம் நண்பகல் அளவில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.