அனுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற அடாவடித்தனங்களை பதிவு செய்துள்ள சிசிடிவி காட்சிகளை நீக்க பெரும் முயற்சி செய்து வருவதாக கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு தகவல் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த அமைச்சர், அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்தபோது, சிறை அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்ததாகவும், அவர்கள் அமைச்சரின் நடத்தைக்கு நிறைய இடம் கொடுத்து அமைச்சருக்கு சார்பாக நடந்தது கொண்டதாகவும் கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பான ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும், துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் நுழைந்து கைதிகளை துன்புறுத்தியதன் காரணமாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே கைதிகளின் உரிமை பாதுகாப்பு குழு தலைவர் சேனக பெரேரா இவ்வாறு தெரிவித்திருந்தார்.