மட்டக்களப்பு சந்திவெளிப்பகுதியில் சட்ட விரோதமான முறையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு தொகை தேக்குமரக்குற்றிகள் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்திவெளி சித்திவிநாயகர் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள களப்பு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த தேக்கு மரக்குற்றிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தலைமையிலான குழுவினரே இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சுமார் நான்கரை இலட்சம் ரூபா பெறுமதியான 24 தேக்குமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், ஒருவர் கைது செய்யப்பட்டமையுடன் மரங்களை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.






