காணாமல் ஆக்கப்பட்டவர்களை சாட்டி, அவர்களுக்கு ஐ.நா நிதி வழங்க வேண்டாம், நாங்கள் நிதிகள் கேட்டு இவ்வளவு காலமும் வீதிகளில் போராடவில்லை, நீதி கேட்டு தான் போராடுகிறோம். 12 வருடம் எங்களுடைய பிள்ளைகளின் உயிர் பிச்சை வேண்டும் என்று தான் போராடுகின்றோம் என்று யாழ் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி சிவபாதம் இளங்கோதை
நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் எமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும்
தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொவிட் காரணமாக எங்களால் நேரடியாக ஜெனிவாவில் சாட்சியம் அளிக்க முடியாததால் ஊடகங்கள் ஊடாக எமது கருத்துக்களை முன் வைக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் _
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 1,500 நாட்களை கடந்து வீதிகளில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராடி வருகின்றோம்.
எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஜெனிவா வரைக்கும் நேரடியாக சென்று சாட்சியம் அளித்து இருக்கின்றோம்.
எங்களுக்கு கால அவகாசம் கால நீடிப்பு வேண்டாம் எங்களுடைய கண்ணீருக்கு ஒரு முடிவு வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவும், மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வேண்டாம் ஸ்ரீலங்கா அரசில் நம்பிக்கை இல்லை என்பதால் தான் நாங்கள் ஜெனிவாவை நாடினோம்.
எனது 5 பிள்ளைகள் இராணுவத்தில் சரணடைந்தனர். இவர்களைப் போல இன்னும் எத்தனையோ மனைவிமார்களுடைய கணவர்களும் குழந்தைகளும் எமது கண்களுக்கு முன்னால் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள்.
அத்துடன், வீடுகளுக்குள் புகுந்தும் வலுக்கட்டாயமாக பிடித்து செல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது??
மேலும், தகப்பன் இல்லாமல் பிள்ளைகளால் வாழ முடியுமா? கணவன் இல்லாமல் மனைவியால் வாழ முடியுமா? பிள்ளைகள் இல்லாமல் பெற்றோரால் வாழ முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களை சாட்டி, அவர்களுக்கு ஐ.நா நிதி வழங்க வேண்டாம் நாங்கள் நிதிகள் கேட்டு இவ்வளவு காலமும் வீதிகளில் போராடவில்லை, நீதி கேட்டு தான் போராடுகிறோம்.
12 வருடம் எங்களுடைய பிள்ளைகளின் உயிர் பிச்சை வேண்டும் என்று தான் போராடுகின்றோம்.
மேலும், எங்களுடைய பிள்ளைகளை விற்று நீங்கள் வெளிநாட்டில் பணம் வாங்க வேண்டாம் என்றும் நாட்டில் விற்பதற்கு வேறு ஒன்றும் இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே குரலாக ஐ.நாவில் ஒலிக்க வேண்டும் என்றும் தனித்தனியாக அரசியலை மேற்கொள்ளாது தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்துக்கும வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.