ஆக்கஸ் கூட்டுத் திட்டம்: அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்பு!

முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் (AUKUS) என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் இராணுவப் பரவல் குறித்த அச்சத்துக்கு மத்தியில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த நாடுகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்த கூட்டு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் சைபர் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும்.

இந்த உடன்பாட்டில் பங்கேற்பதற்காக, பிரான்ஸ் நாட்டால் வடிவமைக்கப்படும் நீர்மூழ்கியை உருவாக்கும் ஒப்பந்தத்தை அவுஸ்ரேலியா இரத்து செய்திருக்கிறது.

அவுஸ்ரேலிய கடற்படைக்கு 12 நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பிரான்ஸ் ஒப்பந்தத்தைப் பெற்றிருந்தது. இது அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய ஆயுதத் தளவாட ஒப்பந்தமாகும்.

ஆனால், இந்த ஒப்பந்தப்படி நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான தளவாடங்கள் பெரும்பாலும் உள்நாட்டிலே பெற வேண்டும் என்பதால், இந்தத் திட்டம் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அவுஸ்ரேலியாப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் ஆகியோர் ஆக்கஸ் என்ற பெயரில் புதிய கூட்டுத் திட்டம் பற்றிய அறிக்கையை வெளியிட்டனர்.

இருப்பினும், அணு ஆயுதமற்ற நாடாக நீடித்திருப்பதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருக்கும் என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *