இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐ.நா சபை செயற்படும் பட்சத்தில் அதற்காக இலங்கை அரசு அதற்கு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்கும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் செய்தது சட்டரீதியாக நீதிக்கு முரணான செயற்பாடாகும்.
இந்தச் செயலை ஏனைய கட்சிக்காரர்களோ அல்லது இலங்கையில் உள்ள ஒரு சாதாரன பிரஜையோ சம்மந்தபட்டிருந்தால் இந்த அரசு நீதிக்கு முன் நிறுத்தியிருக்கும்.
இதனடிப்படையில், இந்த அமைச்சர் கைது செய்யப்பட்டு விசாரணைப்படுத்தப்பட்டு நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும்.
அப்படி நிறுத்தினால் தான் இலங்கை அரசு சட்டம் என்னும் இறைமையை அமுல்படுத்துகின்றது என்பதற்கு சமனாகும். ஆகவே இராஜங்க அமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
இலங்கையில் பயங்கரவாதத்தாலும் மனித உரிமை மீறலாலும் பாதிக்கப்பட்ட பல மனிதர்கள் புலம்பெயர்ந்த வேளையில் 25 நாடுகள் தமிழர்களுக்கு புகழிடம் கொடுத்தது. சர்வதேசத்தின் மனித உரிமை ஆணையகத்திற்கான வெற்றி செயற்பாடாகும். தமிழர்களை பெறுத்தவரையில் இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் அறிக்கை மூலமாக ஐ.நாவில் தெரிவித்துள்ளனர்.
அது தொடர்பாக, ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. இதற்கு இலங்கை அரசு ஆதரவு அளிக்காதபட்சத்தில் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






