மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தியாகராசா சரவணபவன், தமிழரசு கட்சி இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணபிள்ளை சேயோன், பேரின்பராசா ஜனகன் ,சுவீகரன் நிசாந்தன் ஆகிய நான்கு பேருக்கு தியாகதீபம் தீலிபனை நினைவுகூருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று இந்த தடை உத்தரவை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறுகையில் _
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கு குறித்த நான்கு பேரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறன நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு உள்ளதாலும், தற்போது நாட்டில் கொரோனா அச்சம் உள்ளதாலும் இத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15ம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.






