2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ.பூஜித தெரிவித்துள்ளார்.
மேலும், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இனி நீடிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக நேற்று வரை 6,835 பாடசாலைகளிடமிருந்து விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
எனினும், 2,339 பாடசாலைகளில் இருந்து இதுவரை விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயர்தர பரீட்சைக்காக 2,938 பாடசாலைகளே விண்ணப்பித்துள்ளது, 338 பாடசாலைகளிலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தங்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு பெறும் வரை பரீட்சைகளுக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என ஆசிரியர், அதிபர்களின் தெழிசங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, மாணவர் ஒருவருக்கு பரீட்சை எழுத முடியாது போனால் அதற்கான பொறுப்பை பாடசாலை அதிபர்களே ஏற்கவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டுள்ளார்.
எனவே, மாணவர்கள் குறித்து சிந்தித்து, அவர்களுக்கான உயர்தரம் மற்றும் 5 ஆம் ஆண்டிற்கான பரீட்சை விண்ணப்பங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.