‘நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிப்புறப் பொறிமுறை அவசியமில்லை’

நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, வெளிப்புறப் பொறுமுறையொன்றின் தேவை ஒருபோதும் இல்லையென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே தெரிவித்தார்.

அதேபோன்று, அவ்வாறான பொறிமுறை ஒன்றைத் தயாரிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக சட்டக் கட்டமைப்பின் கீழ், நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார்.

ஜனாதிபதி ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஊடகச் சந்திப்பு, இன்று (16) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்தப்பட்ட போது, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“ஜெனீவா குற்றச்சாட்டுகள், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடர் மற்றும் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை” எனும் தலைப்புகளின் கீழ், இன்றைய ஊடகச் சந்திப்பு இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இம்முறை கூட்டத்தொடரின் போது, அதன் ஆணையாளர் நாயகம் மிச்செல் பெச்சலட் அவர்களினால் முன்வைக்கப்பட்ட வாய்மொழி அறிக்கையின் போது, காணாமல் போனோருக்கு நட்டஈடு வழங்கல், எல்.டி.டி.ஈ சிறைக் கைதிகளை விடுவித்தல், பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைத் திருத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தமை மகிழ்ச்சிக்குரியதென்று, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளுக்குள் மறைந்திருந்து, இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையீடு செய்வதை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக், வெனிசியூலா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்து, இலங்கையுடன் கைகோர்த்து நின்றன. மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைப் பின்பற்றல், பயங்கரவாதத்தை ஒழித்தல் போன்ற விடயங்களில் அரசாங்கம் கொண்டுள்ள பொறுப்புணர்வு, அவர்களின் விசேட பாராட்டுக்கு இலக்காகியுள்ளன என்றும், அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

வலயத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, இலங்கையானது அமைதியான நாடாக விளங்குகிறது. பயங்கரவாதத்தை ஒழித்தல், அடிப்படைவாதத்தைப் பரப்பும் தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றே, நாட்டு மக்களிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பல் போன்றவற்றில் இலங்கை முன்னிலையில் இருப்பதோடு, இது விடயங்களில் கடந்த இரண்டு வருடக் காலப்பகுதிக்குள் இலங்கை செயற்பட்ட விதம் தொடர்பிலும் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது, சீரமைக்கப்பட்ட கொள்கையாகும் என்று எடுத்துரைத்த வெளிநாட்டு அலுவல்கள் செயலாளர், அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டு, அதிகாரப் போட்டிகளில் சிக்கிக்கொள்ளாது முன்னோக்கி நகர்வதே இலங்கையின் நோக்கமென்றும் இதன்போது, இந்நாட்டின் அமைவிடம் தொடர்பில் அதிக அவதானத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை எதிர்கொள்வதற்கான இலங்கையின் தயார்ப்படுத்தல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த செயலாளர் ஜயநாத் கொழம்பகே, அரசாங்கத்தின் கொள்கை மிகத் தெளிவாக இருக்கின்றது என்றும் அது தொடர்பில், உலகின் பல நாடுகளுக்கு, கடந்த மாதங்களில் பல்வேறுபட்ட அறிக்கைகள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றின் பிரதிபலனாகவே, அந்நாடுகளின் ஒத்துழைப்பு இலங்கைக்கு தற்போது கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு போன்றன, இது விடயத்தின் பாரிய ஒருங்கிணைப்புடன் செயலாற்றியிருந்தன என்றும் அவர் எடுத்துரைத்தார்.

“கொவிட் சவாலை வெற்றிகொள்வது மற்றும் எதிர்காலத் திட்டங்கள்” என்ற உள்ளடக்கத்துடனேயே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் இம்முறை பங்கேற்கவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து நாடுகளினதும் அரச தலைவர்களதும் உரைகள் அமையவுள்ளன என்று, இந்த ஊடகச் சந்திப்பில் விசேட உரையாற்றிய ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள் தெரிவித்தார்.

தத்தமது நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்திகள் தொடர்பான இணக்கப்பாடுகளுடன், கொரோனா சவாலை வெற்றிகொள்வதற்கு, இம்முறை கூட்டத்தொடர் பாரிய சந்தர்ப்பத்தை வழங்குமென்றும், அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் காணப்படும் பல்வேறு தவறான அபிப்பிராயங்களைச் சீர்செய்வதற்கும், இம்முறை ஐ.நா கூட்டத்தொடரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பயன்படுத்திக்கொள்வார் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *