வவுனியாவில் இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் கிராம சேவகர் பிரிவு சிறப்பான ஒரு திட்டமிட்ட செயற்பாட்டின் மூலமாக மாவட்டத்திற்கே முன்மாதிரியாக விளங்கியுள்ளது.
வவுனியாவில் 6,800 இற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களும், 150 இற்கும் மேற்பட்ட கொவிட் மரணங்களும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 7 ஆம் திகதி முதல் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், தடுப்பூசியை பெறுவதற்காக அதிகளவான மக்கள் கூடும் நிலை ஏற்பட்டது. இதனால், புதிய கொரோனா கொத்தணி உருவாக வாய்ப்புள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு, வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவையாளர் ரவீந்திரனின் முயற்சியால், நகர சபை உறுப்பினரும் வர்சா தொண்டு நிறுவனத்தின் செயலாளருமான சு.காண்டிபன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள் இணைந்து இன்று மிகச்சிறப்பான ஒழுங்கமைப்பை தாண்டிக்குளம் பிறமன்டு வித்தியாலயத்தில் ஏற்படுத்தியிருந்தனர்.
மேலும், 30 வயதிற்கு மேற்பட்ட 510 பேர் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை பூசிகளை பெற்றுக் கொண்டனர்.
இதேவேளை, இச்செயற்பாட்டிற்கான நிதியை வர்சா தொண்டு நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






