தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைக்கேட்டாலே அஞ்சிப்பதுங்கிய ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முன்னாள் போராளிகளின் தலையில் துப்பாக்கியைவைத்து மிரட்டுகின்றமை முதுகெலும்பற்ற செயற்பாடென ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கும் சட்டநடவடிக்கை என்னவென்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம். அவரது தந்தையான ஸ்ரீலங்கா முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அமரர் அனுருத்த ரத்வத்த அன்றைய நாட்களில் போர்க் களத்திற்கு விஜயம் செய்து எம்மையும் சந்திப்பார்.
ஆனால் அவர் மீதான மதிப்பினை இழக்கச் செய்கின்றளவுக்கு தற்போது லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு அமைந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான போர் நடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளைப் பார்த்து லொஹான் ரத்வத்த ஓடி ஒளிந்திருப்பார். மரண பயத்தில் இருந்த நபர் அவர். ஆனால் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவிமுன்னாள் போராளிகளை சென்று சந்தித்து அவர்களை முழந்தாலிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளார்.
மேலும் இது சண்டித்தனமல்ல. இதுபோன்ற செயலை தைரியசாலிகளும் செய்வதில்லை. மாறாக இழிவு சிந்தனை கொண்டவர்களே இதனை செய்வார்கள். மதுபானம் அருந்தியபின்னர் இவர் சண்டித்தனம் செய்துள்ளார். சிறைச்சாலையில் நானும் இருந்துள்ளேன். அங்கு தமிழ்க் கைதிகள் அனுபவிக்கின்ற துன்பங்களை அறிந்துள்ளேன்.
இதுபோன்ற நபர்கள் மீண்டும் வந்து மிரட்டினால் கைதிகள் அனைவரும் இணைந்து தாக்குதல் நடத்தி தூக்கியெறிய வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களும் கைதிகளுக்காக நிற்பார்கள். இதுபோன்ற ஈனச்செயலை செய்தவர்களுக்கு மன்னிப்கே கிடையாது என குறிப்பிட்டார்.






