காணாமல் போனோர் அலுவலகம் என்பது ஒட்டுமொத்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நிராகரிக்கப்பட்ட ஒன்று இந்த அலுவலகத்தால் நமக்கு நீதி கிடைக்கப் போவது இல்லை என்றும், இதனால்தான் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவை வேண்டி நின்றோம் அங்கும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை எனவும் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் _
2009 இற்கு முற்பட்ட காலப்பகுதியில் இருந்து, தற்பொழுது வரையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடந்து கொண்டு இருக்கின்றது.
இன அழிப்பு, காணிகள் அபகரிப்பு, அரசியல் கைதிகள் மீதான தாக்குதல், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகள் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு நாங்கள் ஐ.நா வரை சென்றோம்.
ஆனால், அங்கு நமது கருத்தை குறிப்பெடுத்துக் கொள்ளாத அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ஜூலை மாதம் தெரிவித்த கருத்தை குறிப்பெடுத்து இருக்கின்றார்.
தற்போது, அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு உற்பத்திக்கான இறக்குமதி தடை பற்றி கருத்து தெரிவிக்கும் போது எங்களுடைய உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவித்து விட்டு அதற்குப் பின், வெளிநாட்டு உற்பத்திகளை தடை செய்திருந்தாலும் பரவாயில்லை.
இவர்களின் இந்த செயற்பாட்டால் நாடு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நாட்டை புத்திஜீவிகளை கொண்டும் பொருளாதார வல்லுனர்களின் அறிவுரைகளை கொண்டும் கட்டியெழுப்ப வேண்டுமே தவிர கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாக பேசப்பட்ட ஒருவரை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்து நாட்டை கட்டியெழுப்ப முயற்சி செய்வது தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் .
இதேவேளை, ஐ.நா சபை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தல் போன்றவை தொடர்பாக எதுவுமே கூறாமல் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது யுத்தம் நடத்திய இலங்கை அரசாங்கத்திடம் எங்களை எவ்வாறு அனாதரவாக விட்டு ஓடியதோ, அதேபோன்று போர்க்குற்றம் புரிந்த இனஅழிப்பை ஏற்படுத்திய சர்வதேச நியமனத்துக்கு உட்பட்ட நீதித்துறையை கொண்டிராத இந்த அரசிடன் உள்நாட்டு பொறிமுறையை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்த செயற்பாடானது எங்களுக்கு மிகவும் கவலையை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்கள் வெறும் நஷ்ட ஈடு வழங்குவற்காக உருவாக்கப்பட்டவையே தவிர, இதுவரையும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், எங்களுக்கு நீதி கிடைப்பதில் தடங்கல்களையும் சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும், உயிரோடு இருப்பவர்கள் இன்று இல்லாமல் போய் விட்டார்களோ என்ற அச்சத்தையும் எங்களுக்கு கொடுத்திருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் என்பது ஒட்டுமொத்த காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் நிராகரிக்கப்பட்ட ஒன்று இந்த அலுவலகத்தால் நமக்கு நீதி கிடைக்கப் போவது இல்லை என்றும், இதனால்தான் நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையுடைய ஆதரவை வேண்டி நின்றோம் அங்கும் எந்தவித நீதியும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






