விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல் – முக்கிய தகவல் வெளியானது!

விமான நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல் செய்தி தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெறப்பட்ட மின்னஞ்சல் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு கலப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 20 ம் திகதி விமான நிலையம் மற்றும் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் தாம் குறிப்பிடும் நான்கு நபர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மின்னஞ்சல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் விமான நிலைய வலைத்தளத்திலிருந்து அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக தரவுகளைத் திருடி இதைச் செய்திருக்கலாம் என உளவுப் பிரிவினர் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.

பங்களாதேஷ் இராணுவத்தின் இணையதளம் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் மூலமே குறித்த மின்னஞ்சல் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் அவசரகாலத்தில் எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கடந்த 14ஆம் திகதி முதல் ஒத்திகை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *