கனடாவில் 16 மாதங்களுக்கு பிறகு சர்வதேச எல்லைகளை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கனடாவில் கடந்த மார்ச் 2020 முதல்சர்வதேச எல்லைகள் மூடப்பட்டதுடன் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கிட்டத்தட்ட 16 மாதங்களுக்குப் பிறகு, முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 9-ஆம் திகதி முதல் அமெரிக்கா உடனான சர்வதேச எல்லைகளை திறக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
அன்று முதல் அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் கனடாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தொடர்ந்து வரும் செப்டம்பர் 7-ஆம் திகதி முதல் மற்ற நாடுகளுக்கு இடையான சர்வதேச போக்குவரத்து தடை நீக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Advertisement
இதேவேளை கனடாவுக்குள் நுழையும் பயணிகள் தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்பதுடன், முழுமையாக தடுப்பூசி போடாத எந்த வெளிநாட்டு பயணிகளும் கனடாவுக்குள் நுழைய நிச்சயம் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது, ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகளை மட்டுமே கனடா அங்கீகரித்துள்ளது, அந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை செலுத்தியவர்கள் மட்டுமே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர். சீனா மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளுக்கு கனடாவில் இதுவரை அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
குறிப்பிடத்தக்க சலுகையாக, தடுப்பூசி போடப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் கனடாவுக்குள் நுழையும் 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டியதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் கனடாவுக்கு வரும் அனைத்து பயணிகளும், தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும், கனடாவிற்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் அல்லது மூலக்கூறு சோதனை முடிவை காட்டவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.