ஹிசாலினிக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் தீ எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணையினை வலியுறுத்தியும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு தாண்டவன்வெளி சந்தியில், குறித்த சிறுமியின் கொலைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறும், பல்வேறு பதாகைகளையும் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பறை மேளம் அடித்து உயிரிழந்த சிறுமிக்கு நீதியைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்த போராட்டத்தில் தமிழ்-முஸ்லிம் பெண்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறுமியின் படுகொலைக்கு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

வீட்டு வேலை தொழிலாளர் உரிமைகளுக்கு சட்டம் வேண்டும், ஹிசாலினிக்கு நீதிவேண்டும், வீட்டு வேலையும் தொழில்தான் சட்டம்வேண்டும், நான் வேலைக்காரி இல்லை தொழிலாளி போன்ற கோசங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

ஒரு அமைச்சராக இருந்தவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்கு அமர்த்தியது சட்ட மீறல் எனவும் இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *