கொழும்பு,ஏப் 11
கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
கடந்த இரு தினங்களாகப் பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை உள்நாட்டில் மாத்திரமின்றி சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் மலர் வலயம் வைத்து , மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பினை வெளியிட்டமையையும் அவதானிக்க முடிந்தது.

இரவு நேரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையால் கொழும்பு – காலி முகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கடந்த மூன்று நாட்களிலும் அப்பகுதியில் எவ்வித அமைதியற்ற நிலைமையோ அல்லது வன்முறைகளோ பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் , யுவதிகள் தாம் தமிழ் – சிங்கள புத்தாண்டையும் இந்த இடத்திலேயே கொண்டாடுவோம் என்று அறிவித்துள்ளது போராட்டத்தை மேலும் உக்கிரப்படுத்துகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருக்கும் வரை எமது போராட்டம் ஓயப் போவதில்லை. அவர் பதவிலியிருந்து விலகி பாராளுமன்றத்திற்கு அதிகாரத்தை கையளிக்க வேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் தலைவரால் நாட்டிலுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர் யுவதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


