காணி விவகாரம்- வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் முக்கிய அறிவிப்பு

பிரமனந்தானாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற காணி அடையாளப்டுத்தும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வனப்பாதுகாப்புத் திணைக்களத்தினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றபோது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பாக ஆராயும் மெய்நிகர் வழியூடான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பிரமனந்தனாறு பிரதேசத்தில் எதுவித அறிவித்தலும் இன்றி வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் காணிகள் அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச செயலளார் திரு.பிருந்தாகரனினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதேபோன்ற செயற்பாடு, கரைச்சிப் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட இரணைமடுப் பகுதியிலும் இடம்பெறுவதாவும் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாவது, “அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ள புதிய சுற்றிக்கையின் பிரகாரம், வனப் பாதுகாப்பு, வனஜூவராசிகள் ஆகியவற்றின் திணைக்களங்களினால் காணிகள் புதிதாக அடையாளப்படுத்தப்படுகின்றபோது, பிரதேச செயலாளர்களின் ஒப்புதல் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஆகவே, பிரதேச செயலாளர்களின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளும் வரை, ஆரம்பிக்கப்பட்டுள்ள காணி அடையாளப்படுத்தும் செயற்பாடுகள் அனைத்தையும் வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

மேலும், அமைச்சரவைத் தீர்மானத்தை காணி சீர்த்திருத்த ஆணைக்குழு யாழ்.மாவட்டப் பணிப்பாளர் விமலன் மற்றும் மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரைக் முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *