தமிழர்களின் பொருளாதாரம் இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது – காணாமல் போனவர்களின் உறவுகள்!

தமிழர்களின் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது. அதனை உருவாக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவி தமிழர்களுக்கு தேவை என வவுனியாவில் கடந்த 1616 நாட்களாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “முதலில், கொரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக பைசர் மற்றும் மொடர்னா இரண்டும் மிகவும் சக்திவாய்ந்தவை என்பதும்  99% செயல்திறன் மிக்கது என்பதும் உலகம் அறிந்ததே.

நம் சொந்த நிலத்தில், குறிப்பாக குழந்தைகளையும், கணவனையும் இழந்த தாய்மார்கள், அன்றாட உணவுக்காக போராடுகிறார்கள் தற்போது, தமிழர்களின் பொருளாதாரம் மேற்கத்திய நாடுகளில் வாழும் உறவினர்களிடமிருந்து வருகின்ற பணமே. இது ஒரு உண்மையான பொருளாதாரம் அல்ல, இந்த பணம் பல சில குடும்பங்களுக்கு மட்டுமே உதவுகிறது.

எங்கள் பொருளாதாரம் இலங்கை இராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளது,  குறிப்பாக, வேளாண்மை, வணிகம், மீன்பிடித்தல், கட்டமைப்புகள் சிதைவடைந்துள்ளன.

20 இலட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். எனவே  ஒரு பொருளாதாரத்தை உருவாக்க தமிழர்களுக்கு அதிக ஆற்றல் உள்ளது.

சீனர்கள் தங்கள் கடல் அட்டைப்பண்ணையை கிளிநொச்சிக்கு  கொண்டு வர முடிந்தால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா  நம் தாயகத்திலும் பல்வேறு பொருளாதார திட்டங்களை முன்னெடுக்கமுடியும்.

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் பொருளாதார முதலீட்டை நாங்கள் வரவேற்கிறோம். இந்த முதலீடுகள் எங்களுக்கு மிகவும் தேவையானது.

இலங்கை சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகளாக, தமிழர்களின் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையிலிருந்து எந்த உதவியும் முயற்சியும்  செய்யப்படவில்லை.

அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் தமிழர்களின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு இன்று நாங்கள் கேட்டு கொள்கிறோம்.“ எனக்குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *