அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக பொறுப்பேற்க தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க விஜயத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், மஹிந்த சமரசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும், அவரை அமெரிக்க தூதுவர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பிரச்சினைகளில் இலங்கை தற்போது கடுமையான சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதன் பின்னணியில் முன்னாள் அமெரிக்க தூதுவர் ரவிநாத ஆர்யசிங்கவின் பதவி ஓய்வு பற்றிய அறிவிப்பு வெளியான நிலையில், அந்த பதவிக்கு மஹிந்த சமரசிங்க தான் பொருத்தமானவர் என்று ஜனாதிபதி தெரிவித்தார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், மனித உரிமைகள் அமைச்சராக பணியாற்றி அனுபவம் பெற்ற மகிந்த சமரசிங்க, ஒருமுறை ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சமரசிங்க இந்த முடிவை செய்துள்ளார் எனவும் தற்போது அதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.