தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள்! மனோ கணேசன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் ரோகண பண்டார ஆகியோர் சென்றனர்.

எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பில், மனோ கணேசன் உடனடியாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்துள்ளார்.

சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டமையை அடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் _

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் செயற்பாடே.

அத்துடன், சபாநாயகரின் அனுமதி பெற்ற பின்னர் தான் சிறைச்சாலைகளுக்கோ அல்லது பொலிஸ் நிலையங்களுக்கோ சென்று கைதிகளை பார்வையிட முடியும் என்ற நிலைவருமானால், நாட்டில் எந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொது மக்களுக்கும், அதுவும் தமிழ் சிறுபான்மை மக்களுக்கு என்ன நிலை என்பதை உணருங்கள்.

மேலும், சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மதுபோதையில் துப்பாக்கியை எடுத்து தம்மை அச்சுறுத்தியது உண்மை என தமிழ் அரசியல் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர்.

மேலும், உடனடியாக நாங்கள் அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பதுளை ஆகிய பிரதேங்களைச் சேர்ந்த தமிழ் சிறைக் கைதிகளை நாம் சந்தித்தோம், இச் சம்பவத்தின் பின் அமைச்சர் நாமல் ராஜபக்ச அங்கே வந்ததாகவும், தங்கள் கோரிக்கைகளை ஏற்றே அவர் அங்கு வந்ததாகவும், நடந்த சம்பத்திற்கு வருத்தம் தெரிவித்து, கைதிகளை விடுதலை செய்வதற்கு முயற்சி செய்வதாகவும் உறுதி கூறிகார் என கைதிகள் தெரிவித்தனர்.

ஐ.நா. சபையில் இதுதொடர்பில், மனித உரிமைகள் ஆணையம் கூடி இலங்கை பற்றி கலந்துரையாடியுள்ளது. இலங்கை சார்பாக வெளிநாட்டு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அரசாங்கம் சார்பில் பல சமாளிப்புகளை முன்வைத்தும், அடுத்த வருடம் தீர்வுகளைப் பெற்றுத் தருவோம் என பூசிமெழுகிக் கொண்டிருக்கின்றார்.

ஆனால், அவருடைய செய்கைக்கு நேரெதிர் மாறாக இலங்கையில் சிறைச்சாலை அமைச்சர் லொகான் ரத்வத்த தனது நடத்தையின் மூலம் படுகுழியில் தள்ளியிருக்கிறார்.

மனித உரிமை பட்டியலில் இலங்கைக்கு இவர் கடைசி இடத்தை வாங்கிக் கொடுக்காது ஓயமாட்டார் என தெரியவருகின்றது.

மேலும், இவ் அமைச்சர் அனைத்து அமைச்சுப் பதவியில் இருந்தும் விலக்கப்பட வேண்டும் என்றும் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

இந் நாட்டில் எவ்வாறு சாதாரண மக்களுக்கு தண்டனை வழங்கப்படுமோ அதேபோல் இவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இது தமிழ், சிங்கள, முஸ்லிம்களின் இலங்கை பிரச்சினை, ஆகவே, இதை இனப் பிரச்சினையாக மாற்றாமல் இந்த அமைச்சரின் அடாத்தான செயற்பாட்டுக்கு தீர்வை தரும் பிரச்சினையாகப் பார்க்கிறோம்.

எனவே, அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி, பிரமர் மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *