திருட்டு பழி குற்றச்சாட்டு – தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன் மீட்பு!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளியடி பகுதியில் வசித்து வரும், வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவைச் சேர்ந்த 14 வயதுடைய நாகேந்திரன் டிலக்சன் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

மேலும், நேற்று வெள்ளிக்கிழமை காலை கள்ளியடி பகுதியில் உள்ள அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்ற நிலையில், அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறியபோது, அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளனர்.

பின், அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் நண்பர்கள் சிலர் இணைந்து இச் சிறுவனின் வீட்டிற்கு சென்று, சிறுவனை தாக்கியதாகவும், சிறுவனின் தாய் தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியதாகவும், இருந்தாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்தபோது, தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்த தாயார் ஓடி வந்து பார்த்த போது, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததாகவும் தாயார் தெரிவிக்கின்றார்.

இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனின் மரணம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *