ஊரடங்கை மதித்து வீட்டிலுள்ள அனைவரினது உயிர்களையும் காப்பாற்றுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டிலிருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்லுங்கள் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான பேராசிரியர் சந்திம ஜீவந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாடு முழுவதும் கொரோனா தாண்டவமாடுகின்றது. இந்நிலையில், நாட்டைத் திறக்கும் திகதியை அரசு ஒக்டோபர் வரை பிற்போட்டமை வரவேற்கத்தக்கது.
ஆனால், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீதிகளில்தான் பயணிக்கின்றார்கள். இதனால், வைரஸ்கள் இன்று வீடுகளுக்குள் புகுந்துள்ளன.
மேலும், வீட்டிலிருந்து வெளியே போகும்போதும், வீட்டுக்குள் வந்த பின்னரும் சுகாதார விதிமுறைகளை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒக்டோபர் மாதம் நாடு திறக்கப்பட்டாலும், கட்டுப்பாடுகளை அரசு அதிகரிக்க வேண்டும். மாவட்டங்களுக்கிடையில் அல்லது மாகாணங்களுக்கிடையில் இறுக்கமான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும்.
இலங்கை இன்னமும் கொரோனாவின் சிவப்பு அபாய வலயத்துக்குள் இருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.





