வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்கள், மக்களிடம் பெணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா, குட்செட் வீதியில் இன்று (21) காலை முதல் 6 இளம் பெண்கள் வீடு வீடாக சென்று தாம் மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என பணம் சேகரித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், அவர்களிடம் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பெற்றுக் கொண்டதுடன், பெண் ஒருவரையும் கைது செய்தனர்.
குறித்த 6 பெண்களில் ஒருவர் தமக்கு கீழ் 500 ரூபாய் சம்பளத்திற்கு பெண்களை திரட்டி வீடு வீடாக சென்று பணம் பெற்று, அதில் தான் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் பணம் எடுத்துக் கொண்டு மிகுதிப் பணத்தை அனுராதபுரத்தில் உள்ள பெண் ஒருவருக்கு வழங்கி வந்ததாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 5 பெண்களையும் வழிநடத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் வவுனியா தாண்டிக்குளம், கோவில்குளம், விக்ஸ்காடு, கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.