நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், வவுனியா சுகாதாரத் தரப்பினர் மட்டும் துணிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் மதுபான சாலைகளுக்கு முன்பாக முண்டியடித்துள்ளனர்.
அதன்போது, சமூக இடைவெளியோ, சுகாதார நடைமுறையோ எந்த வகையிலும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.
இதனால், மீண்டும் மிகப் பெரிய கொரோனாக் கொத்தணி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுவரித் திணைக்களம் தாம் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்திருந்தபோதிலும், தம்மிடம் அனுமதி பெறப்படவில்லை என்று சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்திருந்தபோதிலும், மதுச்சாலைகளை மூடவோ அல்லது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில், வவுனியாவில் சுகாதாரத் தரப்பினர் பொலிஸாரின் துணையுடன், ஊரடங்கு நடைமுறைகளை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட மதுபானசாலைகள், 04 கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
வவுனியாவில், கண்டி வீதி, பூவரசன்குளம் பகுதி, ஓமந்தை, மரக்காரம்பளை ஆகிய இடங்களில் உள்ள மதுபானசாலை என 4 மதுபானசாலைகள் தனிமைப்படுத்தல் அறிவித்தல் ஒட்டப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டன.
சுகாதார தரப்பினரின் இச் செயற்பாட்டுக்கு வவுனியா மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.





