பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாவற்குழி ராஜமகா விஹாரயின் கோபுரத்தினை திறந்து வைக்கவுள்ளதுடன் மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற 182 வீடுகளுக்கான உரிமங்களை பயனாளர்களுக்கு வழங்கவுள்ளதுடன், 34 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பங்குபற்றவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காங்கேசன்துறைக்கு செல்லவுள்ள பிரதமர், காங்கேசன்துறை திஸ்ஸ மஹா விகாரையின் பிக்குமாருக்கான விடுதித் திறப்பு மற்றும் குறைந்த வருமானம் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கான வீடுகளையும் கையளிக்கவுள்ளார்.
அதன் பின்னர், வேலணைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள பிரதமர், நூறு நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட தேசிய நிகழ்வை வேலணையில் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
அத்துடன் மறுநாள் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் கந்தசுவாமி கோயில் மற்றும் நயினாதீவு நாகவிகாரை ஆகியவற்றில் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ மத வழிபாடுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், நயினாதீவு மக்களுக்கான நீர் வழங்கல் திட்டம், யாழ். நகர நீர் சுத்திகரிப்பு பணிகள் ஆகியவற்றையும் ஆரம்பித்து வைக்கவுள்ள பிரதமர், தாளையடி நீர்த் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்திலும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


