பொலிஸ் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆகியவை இணையக் குற்றங்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கண்காணிக்கின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும். பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
‘சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு’ என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யூ டியூப் மற்றும் சமூக ஊடகங்களில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் பிற சைபர் குற்றங்கள் குறித்து பொலிஸ் கணினி குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இணையத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க சட்ட அமுலாக்கம் மட்டும் போதாது.
இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும்.
இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
நாங்கள் நிலைமையைக் குறைக்க முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

