
இயற்கை உர உற்பத்தி: அம்பாரை மாவட்டத்தில்முதற்கட்டம் 50,000 மெ. தொ
இயற்கை உரம் உற்பத்தி – அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்

நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்யும் ஜனாதிபதியின் விஷேட வேலைத்திட்டத்திற்கு அமைவாக இயற்கை உரம் உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஐம்பதாயிரம் மெற்றிக்தொன் இயற்கை உரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கல்முனை நெற்றுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
களப்பணியாற்றும் உத்தியோகத்தர்களான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,கிராம சேவை உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக இலக்குகள் நிர்ணயித்து பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு இயற்கை உர உற்பத்திகள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் முடக்க நிலை காணப்படுகின்றது. இந்த காலப்பகுதியை நாம் பயன்தரும் வகையில் பயன்படுத்த இது நல்ல வாய்ப்பாகும். பயனாளிகள் இதனை ஆர்வமாக பயன்படுத்த வேண்டும்.
உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரங்கள் ஒவ்வொரு இடங்களிலும் உள்ள மண்ணின் தன்மைக்கேற்ப உரத்தின் செறிவுத்தன்மை அமையும் வகையிலும் விவசாய திணைக்களம் ஆய்வுகளை செய்கின்றது என்றார்.




