நாசிவன்தீவு…

நாசிவன்தீவு அடிப்படை வசதிகளின்றி தத்தளிக்கும் கிராமம்! தமிழ் அரசியல் தலைவர்கள், எம்பிக்கள் இருந்தும் அல்லல்படும் மக்களை கவனிப்பது யார்?

(வ.சக்திவேல்)
      மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசமாகும். இந்த வாழைச்சேனைப் பிரதேசத்தில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதிதான் நாசிவன்தீவு கிராமமாகும். அக்கிராம மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

      ” எமது கிராமம் கோறளைப் பற்றுப் பிரதேசத்தின் வடக்கு எல்லைக் கிராமமாகும். கோறளைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து நிலத்தொடர்பற்ற ஒரு தீவுப்பகுதிதான் இது. இந்த மக்களின் பிரதான தொழில் மீன்பிடியாகும். அதிலும் குறிப்பாக 75 சதவீதமானவர்கள் வாவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் இந்த வாவியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு போதிய வருமானம் இருந்து வந்தது. தற்போது சனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க, வாவியில் மீன் பிடிபடுவது குறைவடைந்து வருகின்றது.”என்றார் நாசிவன் தீவு கிராமத்தின் வளர்பிறை சணசமூக நிலையத்தின் தலைவர்.

     அல்லல்படும் இந்தக் கிராமத்தின் நிலை குறித்து அவரிடம் நாம் வினவினோம் ;
    ” கடந்த யுத்தகாலத்தில், வெளியிடங்களுக்கான தொடர்புகள் மிகக் குறைந்த அளவிலேதான் எமக்குக் காணப்பட்டிருந்தது. சுற்றிவர வாவி அமைந்துள்ளதனாலும், வாவி மீன்பிடியை பழகிக் கொண்டதனாலும், ஏனைய தொழில்களை எமது கிராம மக்கள் பழகிக் கொண்டது குறைவு. அதுபோல், எமது கிராமத்தில் கல்வி நிலைமையும் குறைவுதான். இங்கு பாடசாலை ஒன்று உள்ளது. ஆனால், எமது கிராமத்தைச் சேர்ந்த எவரும் ஆசிரியராக இல்லை. வெளி இடங்களிலிருந்து அனைத்து ஆசிரியர்களும் இங்கு வந்து கடமையாற்றுவதனால் அவர்கள் அனைவரும் வாவியைக் கடந்து வருவதற்கு படகிலே வந்து கற்பித்து விட்டு மீண்டும் படகிலே திரும்பிச் செல்வதனாலும், இது ஒரு கஷ்டப் பிரதேசமாக இருப்பதனாலும், எவரும் இங்கு உளமார விருப்பத்துடன் வருவதற்குத் தயங்குகிறார்கள்.

 எமது கிராமத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் படித்தவர்களாக   இருக்கின்றார்கள்.”
     “எமது கிராம மக்களின் வாழ்வாதாரம் வாவியுடன் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதனால், யுத்தத்திற்குப் பின்னர் வந்த மாற்றங்களால் எமது கிராமத்து இளைஞர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மலிவான கூலிகளாக தொழிலுக்குச் செல்கின்றனர். எமது கிராமத்தில் 423 குடும்பங்கள் உள்ளன. இக்குடும்பங்களிலிருந்து 89 பேர் மத்திய கிழக்கில் வேலை செய்கின்றார்கள்.”

      அண்மையில், எமது சகோதர சமூகத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவரால் ஒரு சிறியரக உரப்பைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதில்கூட ஏனைய கிராமங்களையும் ஒன்றிணைத்து 70 பேருக்கு தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளார்கள்.”
       எமது கிராமத்திற்கு வருவதற்கும் போவதற்கும் ஒரே ஒரு வீதிதான் உள்ளது. அதுவும் வெள்ள அனர்த்த காலத்தில் துண்டிக்கப்பட்டு, அதில் அமைந்துள்ள பாலம் வருடாந்தம் உடைப்பெடுக்கும். இவ்வீதியும் ஒடுங்கிய சிறிய வீதியாகத்தான் இதுவரையில் இருந்து வருகின்றது. நாங்கள் தோணிகள் மூலம்தான் ஏனைய பிரதேசத்திற்கு போக்குவரத்துச் செய்து தேவைகளை மிகவும் பயத்தின் மத்தியில் பூர்த்தி செய்து கொள்வோம்.      
      எனவே, இவ்வீதியில் அமைந்துள்ள பாலத்தை உயர்த்தி நிர்மானிக்க வேண்டும். கடந்த காலங்களைவிட வெள்ளம் ஏற்படும் மாரிகாலத்தில் அதிகளவு வெள்ளம் வந்தால் எமது கிராமம் முற்றாக மூழ்கிப்போகும் அபாயத்தில் உள்ளது.

423 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் 30 பேரிடம் மாத்திரம்தான் இயந்திரப் படகுகள் உள்ளன. எனவே, எமது கிராமத்தில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க வேண்டும். சுற்றுலாத்தலமாக எமது கிராமத்தை மாற்ற முடியும், எமது கிராமத்தின் பிரதான வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும். மணல் மற்றும் கிறவல் வீதிகளாகத்தான் உள்ளன. கோறளைப்பற்று பிரதேசத்தில் அதிகளவு நிலப்பரப்புக் கொண்ட கிராமம் எங்களது கிராமம்தான். இங்கு முறையான வடிகானமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை, வீதிக்கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டது மிக மிகக் குறைவாகும்.
    சுனாமிக்கு முன்னர் எமது கிராமத்தில் கல்வீடுகள் மிகக் குறைவாகும். சுனாமியால் பாதிக்கப்பட்ட எமது கிராமத்திற்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக பிரித்தானிய செஞ்சிலுவை சங்கம் ஏராளமான வீடுகளை

கட்டிக் கொடுத்தனர். ஆனால் அவ்வீடுகளைக் கட்டிய “ஒப்பந்தக்காரர்கள் முறையாக கட்டிக் கொடுக்காததனாலும். பொருத்தமற்ற முறையில் கட்டப்பட்டதனாலும்,  தற்போது அந்த வீடுகள் அனைத்தும் உடைந்துபோய் உள்ளன. இதனால் எமது கிராமத்தில் 87 பேர் ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றார்கள்.  

     121 குடும்பங்களுக்கு மலசலகூட வசதிகள் இல்லாமலுள்ளன. அதுபோல் பலமுறை தெரிவித்தும் எமக்கு இன்னும் சுத்தமான குழாய் மூலமாக குடி நீர் வசதியை யாரும் ஏற்படுத்தித் தரவில்லை. ” என தமது கிராம மக்களின் உள்ளக்கிடக்கைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தார் நாசிவன் தீவுக் கிராமத்தின் வளர்பிறை சனசமூகத்தின் தலைவர்.

     மனிதன் வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையல்லவா. இவ்வாறு உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது அவை எதிர்காலத்தில் அனைவரையும் கேள்விக்குட்படுத்தும் என்பதையும் துறைசார்ந்தவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

     நாசிவன்தீவு கிராம மக்களின் உள்ளக் கிடக்கைகளைப் பார்க்கின்றபோது அக்கிராமம் பற்றிய நோக்கு, மக்கள் பிரதிநிதிகளிடத்திலும், அரசாங்க அதிகாரிகளிடத்திலும், அவர்களது கண்களுக்குப் புலப்படுவதென்பது மிகவும் கடினமானதாகவே உள்ளதாக அறியமுடிகின்றது. எது எவ்வாறு அமைந்தாலும், தமது வாழ்வாதாரத்திற்கு இன்னலுறும், நாசிவன்தீவு கிராம மக்களுக்கு கைகொடுத்து எழுப்பிவிட வேண்டிய தேவை உள்ளது. சுற்றுலாத்துறைக்கு ஏற்ற வசதிகள் இருந்தும், அவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எட்டாக்கனியாக நிற்கும் அந்த கிராம மக்களின் முயற்சிகளுக்கு உந்து சக்தியளிப்பது யார் என தெரியாதுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

   தமது கிராமத்தில் பல வளங்கள் இருந்தும் மத்திய கிழக்கு நாடுகளில் கூலிக்கு மாரடிக்கும் இளைஞர்களுக்கு கிராமத்திலேயே, தொழில் வழங்க யார் முன்வருவார்கள் எனவும் அந்தக் கிராம மக்கள் ஏங்கி நிற்கின்றனர்.
   எமது பிரதேசத்திற்குட்பட்ட நாசிவன்தீவுக் கிராமம் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய கிராமம்தான். இந்த கிராமத்திற்கான படகுச்சேவையை வெள்ள காலத்தில்தான் அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
ஏனைய காலங்களில் அக்கிராமத்து மக்கள், அவர்களது கிராமத்திலிருக்கின்ற வீதியூடாகத்தான் போக்குவரத்துச் செய்து கொள்கின்றார்கள். அவர்களது வசம் இருக்கின்ற படகு பழுதடைந்துள்ளது. அதனை அவர்கள் எனக்கு தெரியப்படுத்தவில்லை. ஆனாலும், எமது வெளிக்கள உத்தியோகஸ்தரை அனுப்பி அவதானித்துவிட்டு, அதனைச் சீர் செய்து கொடுக்க நான் நடவடிக்கை எடுக்கின்றேன்.
    வடிகானமைப்பு வசதியை உடனடியாக  செய்து முடிக்க இயலாது. வருடாந்தம் வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களினூடாக வடிகானமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். வீடமைப்பு  அதிகாரசபையினால் ஒரு வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.                                எதிர்காலத்தில் அரசாங்கத்தினூடாக வருகின்ற வீட்டு வசதிகளை அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்க முடியும். எதிர்காலத்தில் வரும் திட்டங்களுடாக  வீதிகளையும், செப்பனிடுவதற்கு முன்மொழியலாம். அதுபோல்,  அரச சார்பற்ற நிறுவனங்களையும், அக்கிராமத்தில் வேலை செய்வதற்கு இணைப்புச் செய்துள்ளோம். ஒட்டுமொத்தத்தில் பின்தங்கிய கிராமம் என்ற ரீதியில் நாங்கள் அக்கிராமத்தை அதிகளவு கரிசனையில் எடுத்துத்தான் நாங்கள் செயற்படுகின்றோம். என கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசத்தின் பிரதேச செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

      இக்கிராமத்தின் அபிவிருத்தி பற்றி கடந்த காலங்களில் பல ஊடகங்களில் பல கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்திருந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட குழுவினரும் அண்மையில் அக்கிராமத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் பற்றியும், மண் அகழ்வு பற்றியும், ஆராய்ந்துள்ளனர்.

      நாசிவன்தீவுக் கிராம மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்படும், மக்கள் பிரதிநிதிகளும், அரச அதிகாரிகளும், அதீத அக்கறை செலுத்தி செயற்படுகின்ற பட்சத்தில் அக்கிராம மக்களும், ஏனைய கிராம மக்களுக்கு ஒப்பான வகையில் தமது வாழ்வைக் கொண்டு நடத்தாவிட்டாலும், ஓரளவுக்கேனும், தம்மை வளப்படுத்திக் கொண்டு வாழ்வை நகர்த்தலாமென எண்ணுகின்றார்கள். அம்மக்களின் எண்ணங்கள் ஈடேறுகின்றவரை எமது பார்வையும், அக்கிராமம் மீது இருந்து கொண்டே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *