சிறுவர்களுக்கு எதிராக நாட்டில் அதிகரித்துவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரியும் யாழில் நாளை மறுதினம் (23) சனிக்கிழமை பாரிய எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கில் உள்ள பல சமூக இயக்கங்கள் ஒன்றிணைந்து குறித்த போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
இன்று (21) யாழ். பரமேஸ்வராசந்திக்கு அருகில் உள்ள வல்லமைத்தளத்தில் ஒன்றுகூடிய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே மேற்குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் நாளை மறுதினம் காலை 9.30 மணிக்கு யாழ். பிரதான பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளைய தினம் மட்டுமல்ல இனிவரும் காலங்களிலும் நாடு பூராகவுமுள்ள இயக்கங்களுடன் இணைந்து இவ்வாறான எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


