யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில், குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றினை மீது வன்முறைக் கும்பலொன்று தீயிட்டு அழிக்க முற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (21) இரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடை உரிமையாளர், மனைவி மற்றும் அவரது தம்பியும் கடையிலிருந்து தமது கடையின் பின்புறத்தே உள்ள வீட்டிற்கு, கடையில் உள்ள பொருட்களை கொண்டு சென்ற நேரம் கடைமுன்பாக வந்த அடாவடி குழுவினர் பெற்றோல் போத்தலை எறிந்து தீமூட்ட முற்பட்டுள்ளனர்.
அத்துடன் கடை உரிமையாளரின் மனைவியின் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த பெண் எதுவித காயமுமின்றி தப்பித்துள்ளார்.

அலறல் சத்தத்தையறிந்து கடையின் பின்புறம் நின்றவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முற்பட்ட போது தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக பொறுப்பாதிகாரி சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
தொழில் போட்டி காரணமாகவே குறித்த வன்முறைச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் என கூறப்படுகின்றது.

