கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் பங்குகளில் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கையெழுத்திடப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
“கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை எரிவாயு மின் நிலையமாக மாற்ற நாங்கள் குழாய் அமைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம். அதற்கான ஒரு சேமிப்பு அமைப்பை உருவாக்க விரும்புகிறோம்”
இதற்கான, டெண்டர் ஏல அழைப்புக்களை பெற்றோலிய அமைச்சு 2021 பெப்ரவரி 18 செய்தித்தாள் விளம்பரம் மூலம் அறிவித்திருந்தது.
இருப்பினும், பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சரவை பத்திரத்தை உருவாக்கி கட்டுமான திட்டத்துடன் எத்தகைய தொடர்பும் இல்லாத New Fortress Energy என்ற ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.
இது, ஒழுங்கான ஒப்பந்தம் அல்ல. இது ஒழுங்கான கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தமாக இருந்தால், அரசாங்கம் டெண்டர் ஏலம் எடுக்கின்ற வேளையில் அமெரிக்க நிறுவனம் அதில் கலந்து கொண்டு அதன் மூலம் இதனை பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், அத்தகைய ஏலம் நடைபெறுவதற்கு முன்னர் இதனை அமெரிக்க நிறுவனத்திற்கு கொடுத்தது முறையான விடயம் அல்ல.
அது மட்டுமல்லாமல், 5 வருடங்களுக்கு இயற்கை எரிவாயு வழங்குவதற்கான ஒப்பந்தமும் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் அவர்களது தாய் தந்தையரது சொத்து அல்ல.
அதன்படி இந்த கெரவலப்பிட்டிய மின்நிலையத்தின் நாற்பது வீதமான பங்குகளை, அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திடபட்டது.
இந்த அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் முன்மொழியப்படும்போது எந்த அமைச்சரிடமும் இதற்கான அமைச்சரவை பத்திரம் இல்லை என மேலும் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்திட்ட பிறகு தான் இந்த ஒப்பந்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.