
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினரால் 19 பேருக்கு எதிராகவும் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறுமாத சாதாரண சிறை தண்டனைப்படி 18 மாத சிறைத்தண்டனை விதித்து அதை பத்து வருடங்களுக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.
கடந்த 30ஆம் திகதி கைது செய்யப்பட்ட படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதனால் அப்படகு அரசுடமையாக்கப்பட்டது. மற்ற இரண்டு படகின் உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.